வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

14/11/2016

ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை: உண்மையா? மு.ஸ்டாலின் கேள்வி

4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இஇப்படியொரு  அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது என்று திமுக பொருளாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது. தான் மறுபிறப்பு கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் அம்மையார் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவர் நலம் பெற வேண்டும் என்பதற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்து வந்தவன் என்ற முறையில் அவர் முழு நலன் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

கடந்த ஒரு வாரகாலமாக ரூபாய் நோட்டுத் தட்டுப்பாட்டால் இரவிலும் பகலிலும் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த காரணத்தால், தங்களின் உழைப்பில் சம்பாதித்த அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் முன்பாக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் உரிய அளவில் சில்லறை நோட்டுகளைப் பெற முடியாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கடுமையான இந்த சில்லறைத் தட்டுப்பாட்டினால் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டு கையில் இருந்தாலும் பலனில்லாத நிலை உருவாகியுள்ளது.

அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் ஏழை-நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், அவர்களின் துன்பத்தைத் துடைக்கும் வகையிலான உருப்படியான அறிவிப்போ, குறைந்தபட்சம் சிறு ஆறுதலோ கூட இல்லாத வகையில் இப்படியொரு அறிவிப்பை, மக்களுக்காக நான் என்று சொல்லிக் கொள்ளும் அம்மையார் ஜெயலலிதாவுக்கு எப்படி மனம் வந்தது என்ற கேள்வி எழுகிறது.

மக்களின் நலன் பற்றியோ அவர்கள் வாழும் வாழ்க்கை பற்றியோ சிந்திக்க வேண்டியதில்லை அவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்று அம்மையார் நினைக்கிறாரா, அல்லது அவரது பெயரில் அறிக்கை வெளியிடப்படுவது தான் அ.தி.மு.கவின் வெற்றிக்கான கடைசி அஸ்திரமாக இருக்கும் என கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எல்லாவற்றையும் திரைமறைவிலிருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் கணக்குப் போட்டு இப்படியொரு அறிக்கையை வெளியிடச் செய்திருக்கிறார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

அம்மையார் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை அவரே வெளியிட்ட அறிக்கை என்றால், மக்கள் படும் அவதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்பதைத் தான் அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. அம்மையார் ஜெயலலிதாவின் பெயரில் அறிக்கை வெளியாகியிருக்கிறது என்றால், சொந்தக் கட்சியின் தொண்டர்களையே திசைதிருப்பும் வகையில் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது.

உண்மை என்ன என்பதை, முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் முழு உடல் நலன் பெற்றுத் திரும்ப வேண்டும் என விரும்புவதுடன் அப்போது முதலமைச்சரான அவரிடம் இது குறித்த விளக்கத்தை, நாட்டுமக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெற வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? கலைஞர் கேள்வி 

கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? பிரதமர் மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்படுவது சாமானியர்கள்தான் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பின் விளைவுகளைப் பற்றி விரிவான முறையில் கலந்தாலோசிக்காமல் எடுத்த திடீர் நடவடிக்கை காரணமாக, அதாவது 500 ரூபாய் நோட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்த காரணத்தால்,  இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், அடித்தள மக்களும், உழைத்துப் பிழைக்கும் பிரிவினரும், அன்றாடங்காய்ச்சிகளும் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கடந்த சில நாட்களாக நாளேடுகள் வாயிலாகவும், நேரிலும் கண்டு வருகிறோம்.  அதைத்தான் எனது முதல் அறிக்கையிலேயே "வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும்,  இந்த அறிவிப்பின் காரணமாக, நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர் களுக்கு ஏற்படும் பாதிப்பை விட, நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும்  தங்களிடம் உள்ள ஒரு சில 500 ரூபாய் நோட்டை வாங்கு வதற்கு யாரும் முன் வராத நெருக்கடி நிலையில் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத் தான் இந்த அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது” என்று நான் குறிப்பிட்டதைத்தான் அன்றாடம் நேரிலே கண்டு வருகிறோம்.   எனது உடல் நலம் சிறிது குன்றியுள்ள நிலையில், நாட்டில் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்வுகள் எனது இதயத்தைப் பெரிதும் பாதித்துள்ளன.

12-11-2016 தேதியிட்ட ஆங்கில "இந்து” நாளிதழில் முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்துக்களில் “Long queues, dry ATMs fuel anger and frustration” என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், “Two people died in separate incidents on Friday - a septuagenarian, who collapsed while waiting in queue at a Mumbai suburb, and a Kerala State Electricity Board employee, who fell to his death at a bank branch in Kannur”  என்றும் குறிப்பிட்டுள்ளது.

09/11/2016

’முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகள்’: விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்

” தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக ஆட்சி செலுத்த விரும்புகின்ற ’முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை’, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது”

“உதய் திட்டம்”, “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்”, “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்”, “மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு” உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்து விட்டு, திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் பொறுப்பை வகிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவேரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் அவர்களே நேரடியாக நிதியமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுனர் அவர்களின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

மோடி அறிவிப்பால் ஏழையெளிய மக்கள் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத்தான் காண முடிகிறது: கலைஞர்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏழையெளிய மக்கள் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத்தான் காண முடிகிறது என்று கூறியுள்ள கலைஞர், மத்திய அரசு  நன்கு சிந்தனை செய்து,  ஏழையெளிய நடுத்தர மக்களும்,  சிறு வணிகர்களும், இதன் காரணமாக  பாதிக்கப்படாமல்  தங்கள் வாழ்க்கையை  எப்போதும் போல்  நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட  வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது;  கறுப்புப் பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளது  என்றும் காரணம் கூறியிருக்கிறார்.  வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும்,  இந்த அறிவிப்பின் காரணமாக,  நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட  நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும்  தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை  வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான  நிலையில்,  தெருக்களிலே அலை மோதுகின்ற  அவலத்தைத்தான் இந்த  அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது. 

இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம்  பெறும் ஏழை எளிய மக்களிடமும்  புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது.    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன்  தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்குக் கூட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது?   நான் கூறிய அந்த ஏழையெளிய உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும்,  நடுத்தரக் குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது.   வங்கிகளிலே  கோடிக் கணக்கில், இலட்சக் கணக்கில் பணம் வைத்திருப்போர் - சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை  வெளிநாடுகளுக்குக் கொண்டு  சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது போக,   தங்களிடம் எஞ்சி  உள்ள ஒரு சில கோடி ரூபாய்  கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது.  கறுப்புப் பணத்தை  ஒழிப்பதற்காக   எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால்  வரவேற்கலாம்.   எனினும்,  பெரிய பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதை விட,  சாதாரண, நடுத்தர ஏழையெளிய மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 
  
80 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும்  15 இலட்சம் ரூபாய் வரவு வைப்போம் - என்று  2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த  வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டதை மறைப்பதற்காகவே  இந்த நடவடிக்கை  என்று  காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட முடியாது. 
 
கறுப்புப் பணத்தை ஒழித்திடும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனதா ஆட்சிக் காலத்தின் போது 1000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக எந்த அளவுக்கு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் மத்திய அரசு  நன்கு சிந்தனை செய்து,  ஏழையெளிய நடுத்தர மக்களும்,  சிறு வணிகர்களும்,  இதன் காரணமாக  பாதிக்கப்படாமல்  தங்கள் வாழ்க்கையை  எப்போதும் போல்  நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட  வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

02/11/2016

நவ 20-ல் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் 
எண்ணிக்கை 92 ஆக உயர்ந்திருக்கும்: ஸ்டாலின்  பேச்சு

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (02-11-2016) தருமபுரி மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி அவர்களின் இல்லத் திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி  மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

’’அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே நடைபெற்று முடிந்திருக்கின்ற திருமணம் சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை திருமணமாக நடந்தேறி இருக்கிறது. பெருமையோடு சொல்லப்போனால் இது தமிழ் திருமணம். தமிழகத்திலே இருக்கக்கூடிய சில பிரச்சினைகள் எல்லாம் அண்ணன் துரைமுருகன் அவர்களும் மற்றவர்களும் மிகுந்த வேதனையுடன் உங்களிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். குறிப்பாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 5 ஆண்டுகள் இருந்த ஆட்சி தான். நாங்கள் ஏதோ கடந்த 5 மாதங்களாக ஆளுகின்ற ஆட்சியை செயல்படாத ஆட்சி என்று சொல்லவில்லை, இது கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாத ஆட்சிதான். அந்த 5 வருடமும் வீடியோ கான்பரன்சிங்கில்தான் ஆட்சியை நடத்தினார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வார்கள், ஆட்சி அல்ல காட்சி நடக்கிறது, அதுவும் காணொளி காட்சிதான் என்று தொடர்ந்து எடுத்துச் சொன்னோம். ஆனால் இன்றைக்கு அப்போல்லோவில்தான் எல்லாம் நடக்கிறது. வரக்கூடியவர்கள் உள்ளே செல்கிறார்கள், மருத்துவர்களை சந்திக்கிறார்கள், அமைச்சர்களை சந்திக்கிறார்கள் சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி தருகிறார்கள். அதை இன்றைக்கு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

13/10/2016

காவிரி நதி நீர்ப் பிரச்சினை -
 திமுக கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்
 
காவிரி நதி நீர்ப் பிரச்சினை குறித்து "விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம்    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் 13-10-2016 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.  தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி., தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., பவுன்குமார் (காங்கிரஸ்), உ. பலராமன் (காங்கிரஸ்), சண்முகம் (சி.பி.எம்.), துரை மாணிக்கம் (சி.பி.ஐ), குணசேகரன் (சி.பி.ஐ), கு.செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாய சங்கம்),தெய்வசிகாமணி (விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள்),அய்யாக்கண்ணு (விவசாய கூட்டு இயக்கம்),பாலு தீட்சிதர் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்),ஹேமநாதன் (ஐக்கிய ஜனதாதள விவசாயிகள் பிரிவு), தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், கரூர் சின்னசாமி, தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் உ.மதிவாணன், எம்.எல்.ஏ., ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் : 1
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி ஆகஸ்ட் 2016 வரையிலான காலத்தில் கர்நாடக அரசு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 94 டி.எம்.எசி என்ற நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவைச் சாகுபடியையும், முதல் முறையாகச் சம்பா சாகுபடியையும் இழந்து மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வறுமையிலும், கடன் தொல்லைகளாலும் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.  மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 26 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படுவதோடு, விவசாயத் தொழிலாளர்கள் பல இலட்சம் பேர் வாழ்விழந்து வேறிடம் பெயர்ந்து செல்லக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

01/09/2016

நிலைகுலைந்த ஆட்சி - நிரந்தர வீழ்ச்சி!
ஜெயா தலைமையில் 100 நாள் வேதனைகள்!

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை ஆகியவற்றின் ஆதரவோடும், கறுப்புப் பணத்தின் துணையோடும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.   அதனையொட்டி அரசுக்கு ஆதரவான ஏடுகளில் எல்லாம் முழு பக்கத்திற்கு, முதல் பக்கத்தில் 25 சாதனைகள்  விளம்பரமாக அரசினால் தரப்பட்டுள்ளன.   அந்த 25 சாதனைகளில் பல, அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் மட்டுமே உள்ள அரைகுறைச் சாதனைகள்.  அதாவது நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாதனைகள்.    அதில் 7 சாதனைகள் மின்சாரம் பற்றியவை.  மடிக்கணினி, விலையில்லா மாடு, தாலிக்குத் தங்கம்  போன்ற ஒருசில இலவசங்கள் சாதனைகள் பட்டியலிலே உள்ளன. முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த ஒரு சில அறிக்கைகளும்  இந்தச் சாதனை விளம்பரத்திலே இடம் பெற்றுள்ளன. அம்மா திட்ட முகாம் மூலம் 1,99,209 மனுக் களுக்கு உடனடித் தீர்வு!  தயவு செய்து நம்புங்கள்.  விளம்பரம் செய்துள்ளார்கள். 100 நாட்களில் 1,99,209 மனுக்களுக்குத் தீர்வு என்றால்,  நாள் ஒன்றுக்கு 1,992 மனுக்களுக்குத் தீர்வாம்!  மக்களின் குறைகளைத் தெரிவிக்கும் மனுக்களுக்குத் தீர்வு காண்பது என்பது நிர்வாகத்தில் வழக்கமாக நடைபெற வேண்டிய காரியம்;  அது சாதனைப் பட்டியலில் வருமா?
அது சரி;  1,99,209 மனுக்களுக்குத் தீர்வு என்றால், எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு விட்டனவா?  கேழ்வரகில் நெய் வடிகிறதாம்; கேட்டுக் கொள்ளுங்கள் தமிழர்களே!  அமைப்பு சாரா நல வாரியங்களில், 69,764 தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, 99,703 பயனாளி களுக்கு நலத் திட்ட உதவிகளாம். 100 நாட்களில் 69,764 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டார்கள் என்றால் நாள் ஒன்றுக்கு 697 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்களாம். பதிவு செய்யப்பட்டது, 69,764 தொழிலாளர்கள்.  ஆனால் நலத் திட்ட உதவிகள் 99,703 பயனாளிகளுக்கு, அதாவது ஒரு நாளைக்கு 997 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாம்.  அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா?  இப்படித்தான் அந்தச் சாதனைகளின் பட்டியல் விளம்பரமாக ஒரு சில நாளேடுகளிலே வந்துள்ளது!
இந்த 100 நாட்களில், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளின் பட்டியலைப் பார்க்கலாமா?

Labels